பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்

28
பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம் | NBA Legend Kobe Bryant Teenage Daughter Killed Helicopter Crash
பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம் | NBA Legend Kobe Bryant Teenage Daughter Killed Helicopter Crash

அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயன்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.

லாஸ் ஏஞ்சல்ஸ்:

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சுமார் 65 கிமீ தொலைவில் உள்ள கலாபசாஸ் பகுதியில் உள்ள கரடுமுரடான மலைப்பகுதியில், ஒரு ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. விழுந்த சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்தது. 

விபத்து குறித்து தகவல் அறிந்த  தீயணைப்பு வீரர்கள மற்றும் மருத்துவக் குழுவினர் அங்குவிரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த விபத்தில் ஒருவரையும் உயிருடன் மீட்க முடியவில்லை. 

அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயன்ட், அவரது மகள் கியன்னா உள்ளிட்ட 9 பேர் என, ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். பிரயன்ட் மற்றும் அவரது மகள் பற்றிய தகவல் மட்டுமே முதலில் வெளியானது. பைலட் உள்ளிட்ட மற்ற 7 பேர் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை. 

41 வயது நிரம்பிய கோப் பிரயன்ட், அமெரிக்காவின் கூடைப்பந்து கூட்டமைப்பின் மிக முக்கியமான வீரர் ஆவார். உலகின் தலைசிறந்த கூடைப்பந்து வீரர்களில் ஒருவரான இவர், 5 முறை என்பிஏ சாம்பியன்ஷிப் பட்டத்தைவும், ஒலிம்பிக்கில் இரண்டு முறை தங்கப்பதக்கமும் வென்றுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக 20 ஆண்டுகளாக விளையாடியுள்ளார். 

பிரயன்டின் மரணம் கூடைப்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் பிரயன்டின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்கள் மூலம் ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

லாஸ் ஏஞ்சல்சில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு, பொதுவெளியில் பிரயன்டின் உருவப்படத்தை வைத்து மலரஞ்சலி செலுத்தினர்.