அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி மார்ச் 25-ல் தொடங்கும்

38
Ramar Temple Construction Begin From March 25th.
Ramar Temple Construction Begin From March 25th.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி மார்ச் 25-ந்தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான 11 பேர் கொண்ட அறக்கட்டளை குழு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

புதுடெல்லி:

அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இறுதி தீர்ப்பில் சர்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.

முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்வதற்காக தனியாக 5 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும் என்றும் அதே தீர்ப்பில் சொல்லி இருந்தனர்.

ராமர்கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை நிறுவ வேண்டும், மேலும் கட்டுமான பணிக்கான பணத்தை பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக வசூலித்துக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

கோவில் அறக்கட்டளையை மத்திய அரசே உருவாக்க வேண்டும், 3 மாதத்தில் அறக்கட்டளை நிறுவப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை விதித்து இருந்தது. அதன்படி பிப்ரவரி 9-ந்தேதிக்குள் அறக்கட்டளையை நிறுவி ஆக வேண்டும்.

இதுதொடர்பாக முடிவுகளை எடுப்பதற்காக ஏற்கனவே மத்திய அரசின் உள்துறை தனி அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி இருந்தது. அவர்கள் அறக்கட்டளையை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த அறக்கட்டளையில் 11 உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டிருந்தது. அதன்படி 11 உறுப்பினர்களை தேர்வு செய்து வருகிறார்கள். 11 பேர் கொண்ட குழு யார் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

இதில் மத்திய உள்துறை அதிகாரிகள், உத்தரபிரதேச அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புகளை சேர்ந்தவர்கள் இடம்பெற இருக்கிறார்கள். குறிப்பாக விசுவ இந்து பரி‌ஷத் தேசிய துணைத்தலைவர் ஜம்பத்ராய் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அயோத்தியில் உள்ள சில கோவில்களின் தலைவர்களும் இடம்பெற இருக்கிறார்கள். அறக்கட்டளை உருவாக்குவது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். முக்கிய பங்காற்றி வருகிறது. அறக்கட்டளை குழு அறிவிக்கப்பட்டதும் கோவில் கட்டுமான பணி குறித்து முடிவெடுப்பார்கள்.

எந்த மாதிரி கோவில் அமைய வேண்டும் என்பது குறித்தும் அதில் முடிவெடுக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு கட்டுமான பணிகள் தொடங்கும்.

ராமநவமி தினத்தில் கட்டுமான பணியை தொடங்க உள்ளனர். அநேகமாக மார்ச் 25-ந்தேதி கட்டுமான பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 25-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 2-ந்தேதி வரை சைத்திர நவராத்திரி தினம் ஆகும்.

அந்த நாளில் தொடங்குவது நல்லது என்று கணித்திருக்கிறார்கள். எனவே மார்ச் மாதம் கட்டுமான பணி தொடங்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது.