இன்று தை அமாவாசை: விரதம் இருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யுங்கள்..

40
இன்று தை அமாவாசை: விரதம் இருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யுங்கள். | Thai Amavasai viratham.
இன்று தை அமாவாசை: விரதம் இருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யுங்கள். | Thai Amavasai viratham.

வாசகர்களே… இன்று (வெள்ளிக்கிழமை) தை அமாவாசை தினமாகும். இன்று பித்ருக்களை நினைத்து ஒவ்வொருவரும் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.

அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனர்.

முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை!

சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக் கற்றையில் உள்ள அமிர்தத்தை சாப்பிடும் அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் ரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.
நம்மை யாராவது நினைத்துப் பார்க்கிறார்களா? நமக்குத் தர்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும். எனவே அமாவாசை அன்று கண்டிப்பாக நாம் நம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். அமாவாசை பிதுர் தர்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவர்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

அமாவாசையன்று புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீர்த்தமாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.  ஒவ்வொரு மாதமும் அமாவாசையில் அன்னதானம் செய்ய முடியாதவர்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும்.

தானங்கள் தருவது அவரவர் வசதியைப் பொறுத்தது. அன்னதானம் சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும். எதுவும் செய்ய முடியாமல் இருப்பவர்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும்.

முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்.எத்தனை பேருக்கு தமது தாய் தந்தையர் இறந்த தேதி, நேரம் தெரியும்? தெரியவில்லை யென்றால் முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அவர்கள் இறந்த தேதிக்கு உண்டான திதியை தெரிந்து கொள்ளுங்கள்.

மறைந்த முன்னோர்களின் இறந்த திதி வருடா வருடம் வரும், அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணத்திற்கு கறுப்பு எள்தான் பயன்படுத்த வேண்டும். கீழ்க்கண்ட பெயர்களை சொல்லி தர்ப்பணம் செய்ய வேண்டும். உங்கள் தாயாரின் தகப்பனார் மற்றும் – தாயார், உங்கள் தகப்பனாரின் தகப்பனார் மற்றும் – தாயார் உங்கள் தாயாரின் தாத்தா – பாட்டி உங்கள் தகப்பனாரின் தாத்தா – பாட்டி

உங்கள் தாயாருடைய தகப்பனாரின் தாத்தா – பாட்டி     உங்கள் தகப்பனாருடைய தகப்பனாரின் தாத்தா – பாட்டி இப்படி நமது தாய்வழி, தந்தை வழி மறைந்த முன்னோர்களுக்கு கட்டாயம் தர்ப்பணம் செய்தல் வேண்டும். மேலும் உங்கள் ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள் இறந்திருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் தகப்பனாருடன் பிறந்தவர்கள் இறந்திருந்து அவர்களுக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.

தர்ப்பணத்தை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆற்றில், கடலில், அருவியில், கிணற்றடியில், நமது பூஜைய றையில், ஹாலில் எங்கு வேண்டு மானாலும் செய்யலாம். மனம் சுத்தமாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். தர்ப்பணம் செய்வது பற்றி தங்களுக்கு முறைகள் தெரிந்திருந்தால் தாங்களே செய்து கொள்ளலாம்.

முதலில் தர்ப்பணம் செய்யும் நாள் அன்று காலை சாப்பிடக் கூடாது. மதியம் சாப்பிடலாம். கத்திரிக்காய், வாழைக்காய் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். வெங்காயம், பூண்டு, மாமிசம் உண்ணுதல் கூடாது. மிளகு சேர்ப்பதும் நன்மையைத் தரும். பச்சரிசி உண்ண வேண்டும். இரவு சாதம் சாப்பிடுதல் கூடாது. இட்லி, தோசை, சப்பாத்தி சாப்பிடலாம்.

முதலில் யாருக்கு திதியோ அவருக்கு தர்ப்பணம் செய்தல் வேண்டும். உதாரணமாக திதி உங்கள் தந்தையாருக்கு என்றால் முதலில் உங்கள் தந்தைக்கு தர்ப்பணம் செய்தல் வேண்டும். பின் தந்தை வழியில் உள்ளவர்களுக்கு. பின் தாய் வழியில் உள்ளவர்களுக்கு, செய்தல் வேண்டும். தை அமாவாசையன்று, `பித்ரு’ எனப்படும் முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் முதலானவை செய்யப்பட வேண்டும். அன்று தீர்த்தங்களில் எள்ளை விட வேண்டும். வாழைக்காய் உள்ளிட்ட சில காய்கறி வகைகளைப் படைக்கின்றனர். விளக்கு முன் பெற்றவர்களின் படங்களை வைத்து உணவு படைத்து பூஜை செய்ய வேண்டும்.

காகங்களுக்கும், ஏழைகளுக்கும் உணவளிக் கின்றனர். நம் முன்னோர் தங்கியிருக்கும் இடம், `பிதுர் லோகம்‘ எனப்படும். அங்கே, `பிதுர் தேவதைகள் இருக்கின்றனர். நம் உறவினர் ஒருவர் இப்போது பசுவாகப் பிறந்திருந்தால் நாம் அனுப்பும் பொருள் வைக்கோலாகவும், குதிரையாக பிறந்திருந்தால் கொள்ளாகவும். யானையாக பிறந்திருந்தால் கரும்பு, தென்னை ஓலை என ஏதோ ஒரு வடிவமைப் புக்கு மாற்றப்பட்டு, நாம் தர்ப்பணம் செய்யும் பொருள் போய் சேர்ந்து விடும். இதை சேர்க்கும் வேலையை, `பிதுர் தேவதைகள்’ செய்கின்றனர். இதற்காகவே, இவர்களை கடவுள் நியமித்திருக்கிறார். இறப்புக்கு முன் நம் பெற்றோருக்கு எத்தனையோ சேவை செய்கிறோம். அது இறப்புக்கு பின்னும் தொடர வேண்டும்.

கிராமங்களில் இன்றும் ஒரு வழக்கம் உண்டு. யாராவது தன் சகோதரிகளைக் கன்னிப் பருவத்தில் இழந்து விட்டால், அவர்களுக்கு புடவை, தாவணி, பாவாடை படைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. இந்த புடவையை ஒரு பெட்டியில் வைத்து, ஒரு வருடம் வரை வீட்டில் ஒரு மூலையில் தொங்க விடுவர்.

அந்தப் பெண் இந்த புடவையை பயன்படுத்திக் கொள்வாள் என நம்புகின்றனர். பிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால் பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய்விடும்.